சென்னை: மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ராஜசேகர் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்று தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பலர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மார்ச் 31-ஆம் தேதி வரை உபயோகப்படுத்திய மின்சாரத்துக்கான கட்டணத்தை மே 6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும், மின் கட்டணம் செலுத்தாதபட்சத்தில் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் மின்கட்டணம் செலுத்த, வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும். கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்படவில்லை. இதனால் மக்களின் பணப்புழக்கம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின் கட்டணத்தைச் செலுத்த உத்தரவிட்டால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். எனவே மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மின் இணைப்பைத் துண்டிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மின் கட்டணம் செலுத்தாத வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் மின் இணைப்புகளை மே 18-ஆம் தேதி வரை துண்டிக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் , மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 6-ஆம் தேதி வரை மேலும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Post a Comment

Previous Post Next Post