சென்னை: தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 7,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், நாள்தோறும் சராசரியாக 12,536 பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் திங்கள்கிழமை அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி:
கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒருபுறம் அந்த நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் அதேவேளையில், மற்றொரு புறம் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை, மாநிலத்தில் 3.37 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 11,760 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதிகபட்சமாக சென்னையில் 7,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பரிசோதனைகளை அதிகரித்ததால்தான் தமிழகத்தில் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிய முடிந்தது. அந்த எண்ணிக்கையைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை. திங்கள்கிழமை மட்டும் புதிதாக 536 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 46 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மட்டும் திங்கள்கிழமை 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 43 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குறைவான அளவில் கரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருப்பது உண்மைக்குப் புறம்பானது. மாநிலம் முழுவதும் கரோனாவைத் தடுக்கும் நடவடிக்கைகளில் எந்த விதமான தொய்வுமின்றி அரசு செயல்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கரோனா தொற்றுக்கு ஆளானோருடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் அவ்வாறு 85 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களில் தமிழகத்தில் சராசரியாக 12,536 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வரும் நாள்களிலும் அந்த எண்ணிக்கை குறையாது என்றார் அவர்.

4,406 பேர் குணமடைந்தனர்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 234 பேர் பூரண குண
மடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,406-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,600 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மாநிலத்தில் பலி எண்ணிக்கை 81-ஆக அதிகரித்துள்ளது. சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 53 வயது பெண்ணும் 65 வயது மூதாட்டியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அதேபோன்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி ஒருவரும் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post