பாகுபலி–2 படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை கேட்டு புதிய மனு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
ஏப்ரல் 26, 03:09 AM
சென்னை,

நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள பாகுபலி–2 திரைப்படம் வருகிற 28–ந்தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் தமிழ் வினியோக உரிமையை ‘கே புரொடசன்’ நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.என்.ராஜராஜன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், ராஜராஜனுக்கு எதிராக அண்ணாநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ராஜராஜன் ரூ.1 கோடியே 48 லட்சம் தரவேண்டும். இந்த பணத்தை கேட்டபோது, அவர் காசோலை கொடுத்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, அவரது வங்கிக் கணக்கு முடித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, ராஜராஜன் பெற்றுள்ள பாகுபலி–2 படத்தின் அனைத்து உரிமைகளையும் முடக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

கருத்து வேறுபாடு
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கிற்கு பதில் அளிக்க ராஜராஜனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கார்த்திகேயன் மற்றொரு புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:–

பாகுபலி–2 படத்தின் உரிமையை ராஜராஜன், ஸ்ரீ கிரீன் புரொடசன் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டதாக முதலில் தெரியவந்தது. ஆனால், தற்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. பாகுபலி–2 படத்தின் விளம்பரத்தில் ஸ்ரீ கிரீன் புரொடசன் நிறுவனத்தின் பெயர் இல்லை. தற்போது, இதுதொடர்பாக ‘கேவியட்‘ மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தடை வேண்டும்
தற்போது இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு நாடகமா? என்பதும் தெரியவில்லை. ஆனால், பாகுபலி–2 படத்தின் வினியோக உரிமம் விற்பனை செய்யப்படவில்லை என்பது மட்டும் தெரியவந்துள்ளது. எனவே, இந்த உரிமத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்யவும், திரையிடவும் ராஜராஜனுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி கே.கல்யாணசுந்தரம் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது, எதிர்மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்வதாக கூறினார். இதையடுத்து விசாரணையை நாளைக்கு (27–ந்தேதி) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Post a Comment

Previous Post Next Post