சேலம்: தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி இருப்பாளி பகுதியில் அம்மா சிறு மருத்துவமனையை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி பேசுகையில்: தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருக்கும் 2.6 கோடி அட்டைதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய் வழங்கப்படும். 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றார்.

 

இதையும் படிக்கலாமே.. 2021-ல் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம்: முதல்வர் பழனிசாமி

 

தமிழக முதல்வரின் அறிவிப்பையடுத்து, ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் அறிவித்திருக்கும் இந்த பொங்கல் பரிசுத் தொகை தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரியுடன், ஒரு துண்டு கரும்புக்குப் பதிலாக முழு கரும்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

 

பொங்கல் பரிசாக பச்சரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், வரும் ஆண்டில், ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

வீடு வீடாக வந்து டோக்கன் கொடுக்கப்பட்டு, ஜனவரி 4-ம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post